பாட்னா

பீகார் மாநிலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களைக் குறித்து அம்மாநில துணை முதல்வர் சுசில் குமார் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்  மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  பாஜக அரசு தற்போது கொண்டு வந்துள்ள திருத்த்ப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடெங்கும்  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  பீகார் மாநிலத்திலும் இது போன்ற போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து பீகார் துணை முதல்வர் சுசில் குமார் மோடி செய்தியாளர்களிடம், “பீகாரில் பல மாவட்டங்களில் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு, மற்றும் மக்கள் தொகை பதிவேடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  இவை எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவிக்க நடத்தி வருகின்றன.  இந்த போராட்டங்களின் மூலம் பாஜக மேலும் பலம் அடையும்.  குடியுரிமை சட்ட ஆதரவு கூட்டங்களுக்கு ஊடகங்கள் முக்கியம் காட்டுவதில்லை.

இந்த குடியுரிமை சட்ட போராட்டங்களில் கலந்துக் கொள்பவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் ஏழை மற்றும் தலித் மக்கள் கலந்துக் கொள்வதில்லை.    எங்கள் கட்சியின் தலைவர் ஏற்கனவே குடிமக்கள் பதிவேடு அமலாக்கப்படாது என அறிவித்துள்ளார்.   அத்துடன் விஷயம் முடிவு பெற்றுள்ளது.

மக்கள் தொகை பதிவேடு சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொண்டு வரப்பட்டது.  இது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்  என நாங்கள் பலமுறை கூறி உள்ளோம்.  அப்போது கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது

நாட்டில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இத்தனை போராட்டங்கள் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  எங்களால் மக்களைச் சமாதானம் செய்ய முடியவில்லை.  எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பக் கடுமையாகப் பாடுபட்டு வெற்றியைக் கண்டுள்ளன.   முன்பே முத்தலாக் போன்றவற்றுக்கு கடும் போராட்டம் நடந்து அதை மக்கள் ஒப்புக் கொண்டனர்.  விரைவில் மக்கள் இந்த சட்டம் குறித்துத் தெளிவு அடைவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.