டில்லி

தேர்தலின் போது தங்களுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக  நிறைவேற்றவில்லை என சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்த் கூறி உள்ளார்.

சிவசேனா கட்சியுடன் மகாராஷ்டிர முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துக் கொள்ள பாஜக ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறி வருகிறது.   ஆனால் அதை பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.  மாறாக முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு அளிக்க எப்போதும் வாக்குறுதி அளிக்கவில்லை என பாஜக கூறி வருகிறது.

இந்நிலையில் ஆட்சி அமைக்க மகாராஷ்டிர ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை.    ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை அமைக்க முன்வரவில்லை.   சிவசேனா கட்சி முன் வந்த போதிலும் அக்கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் மற்ற கட்சிகள் ஆதரவு அளிக்கத் தயங்கி வருகின்றன.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம்  பெற்றிருந்த சிவசேனா கட்சியின் அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  இது குறித்து அவர்,”தேர்தலுக்கு முன்பு எங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.  எனவே மத்திய அமைச்சரவையில் தொடர எனக்கு ஒப்புதல் இல்லை.  ஆகவே நான் ராஜினாமா செய்துள்ளேன்” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.