ராமர் கோவில் விவகாரம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமில்லை : உமா பாரதி

டில்லி

த்திய அமைச்சர் உமா பாரதி ராமர் கோவில் விவகாரம் பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானதில்லை என தெரிவித்துள்ளார்.

 

அயோத்தியில் நேற்று ராமர் கோவில் அமைக்க அரசை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் தர்மசபை கூட்டத்தை நடத்தியது. அதில் நாடெங்கும் இருந்து சுமார் 3 லட்சம் இந்துத்வா தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். அந்த கூட்டத்தில் ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அந்த கட்டுமானம் ஆரம்பிக்க உள்ள நாள் குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் பாஜக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

நேற்று அயோத்தியில் சிவசேனா சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான சிவசேனா தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பாஜக ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புப் படி நடப்பதாக முடிவு செய்திருந்தால் அதை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருக்கக் கூடாது என கூறினார்.

சிவசேனாவின் இந்த கூட்டத்துக்கு உத்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேசவ் பிரசாத், “ராமர் கோவில் விவகாரத்தை பாஜகவிடம் இருந்து சிவசேனா கடத்தி உள்ளது. ஆனால் அதற்காக வி இ ப வுக்கு போட்டியாக கூட்டம் நடத்தி இருக்க வேண்டாம். பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால் அவர் வி இ ப வை ஆதரித்திருப்பார்’ என கூறி உள்ளார்.

ஆனால் மத்திய அரசின் அமைச்சரும் பாஜக வின் முக்கிய தலைவருமான உமாபாரதி, “உத்தவ் தாக்கரேவின் முயற்சியை நான் வரவேற்கிறேன். ராமர் கோவில் என்பது பாஜகவின் தனிச் சொத்து இல்லை.  பாஜக ராமருக்கு காப்புரிமை வாங்கவில்லை.  பகவான் ராமர் எல்லோருக்கும் உரிமையானவர். எனவே நான் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், அகாலி தள், ஓவைசி, ஆசம் கான், உள்ளிட்ட அனைவரையும் ராமர் கோவில் கட்ட ஆதரவளிக்க முன் வரவேண்டும்” என கூறி உள்ளார்.

உமா பாரதியின் இந்த கருத்து பாஜகவினரிடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி