சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியான நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக இடையிலான தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுக பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள்  கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை முடிவுகள் எடுக்காத நிலையில்,  இன்று மீண்டும் பேச்சு வார்த்தை தொடர உள்ளது.   விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என பாஜக மாநில தலைவர் முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதுபோல,  அதிமுக- தேமுதிக இடையேயும் பேச்சுவார்தை நடைபெற்றது. அப்போது, தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என அதிமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதை ஏற்க தேமுதிக மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம்; 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என விஜயபிரபாகரன் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். அதுபோல  தேமுதிக துணை செயலாளர் எல்.கே .சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், நமது முதல்வர் விஜயகாந்த்; நமது சின்னம் முரசு என பதிவிட்டார்.  இதுவும் கூட்டணி முறிவுக்கான அச்சாரமாக கருதப்பட்டது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து மீண்டும் அழைப்பு வந்துள்ளதால், இன்று  பேச்சுவார்தை நடைபெற உள்ளது. இன்றையபேச்சுவார்த்தையின்போது, தேமுதிகவுக்கு மேலும் 3 இடங்கள் ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதிமுக  பாஜக, அதிமுக தேமுதிக இடையே நடைபெற உள்ள பேச்சுவார்ர்தையில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தேமுதிக அதிமுக வழங்கும் தொகுதிகளை ஏற்க மறுத்தால், 3வது அணியை அமைக்கும் வகையில், சசிகலாவுடனோ, கமல்ஹாசன் கட்சியுடனோ கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறத.

இன்றை பேச்சுவார்த்தையின்போது, பாஜகவுக்கு அதிகபட்சமாக 22 தொகுதிகளிலும், தேமுதிகவுக்கு 15 தொகுதிகளும் ஒதுக்க அதிமுக தயாராக  இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.