ஜனநாயகத்தில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை: சீதாராம் யெச்சூரி

--

சென்னை:

நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை பார்க்கும்போது நாடாளுமன்ற  ஜனநாயகத்தில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த யெச்சூரி, கர்நாடகத்தில் பாஜக சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் கால அவகாசம் அளிக்காமல், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் குரல் வாக்கெடுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனவும் கூறி உள்ளது.

அதுபோல  கோவா, மணிப்பூர், மேகாலயத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்த காங்கிரஸை ஆட்சியமைக்க அந்த மாநில ஆளுநர்கள் அழைக்கவில்லை. பெரும்பான்மை எம்எல்ஏக்களைக் கொண்டு தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிதான் ஆட்சி அமைத்தது. ஆனால், கர்நாடகத்தில் மட்டும் பெரும்பான்மை இல்லை எனத் தெரிந்தும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

ஜனநாயகத்தின் மீது பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

கடந்த 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சமூகம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளும் சீரழந்துபோய் உள்ளது. வேலையின்மை திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளுக்கு விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது.

அதுபோல நாடு முழுவதும இளம் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் அதிகரித்து வருகிறது.   மதச்சார்பின்மை, சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றைத் தகர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கப் பிரிவு, உளவுத் துறை போன்ற அரசியல் சாசன அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. தேர்தல் வெற்றிக்காக, அதிகாரத்தில் நீடிப்பதற்காக மத உணர்வுகளை, மக்களிடம் விதைத்து வருகிறது. இதிலிருந்து நாட்டை மீட்க மோடி அரசை அகற்ற வேண்டும். அதற்கு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed