சபரிமலை விவகாரம்: கேரள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி!

திருவனந்தபுரம்:

கேரளாவில் சபரிமலை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அங்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 2 இடங்களை மட்டுமே பிடித்தும், ஒற்றை இலக்க எண்களில் வாக்குகளை பெற்றும்  மரண அடி வாங்கி உள்ளது. இது பாஜக தலைமைக்கு கடுமை யான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கேரள முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்த போராட்டத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலமாக இருந்து இயக்கி வந்தது.

இந்த நிலையில், மாநிலத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

சபரிமலை விவகாரத்தால் கேரள மக்களின் எதிர்ப்பு ஆளும் கம்யூனிஸ்டு அரசுக்கு விழும் எதிர்பார்த்திருந்த நிலையில், போராட்டத்தை உருவாக்கிய பாஜகவுக்குத்தான் மரண அடி விழுந்துள்ளது.

100 சதவிகிதம் படிப்பறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் பொதுமக்கள் மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றை யோசித்து, வகுப்பு வாதத்தை வேரறுக்கும் வகையில் தங்களது வாக்குகளை பதிவிட்டு உள்ளனர்.

அதன்படி 39 உள்ளாட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவில், கேரள ஆளும் இடதுசாரி கூட்டணி 22 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 13 இடங்களையும் பாஜக கூட்டணி 2 இடங்களையும், மற்றவைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளது.

சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த பாஜக தனது கட்சியின் வளர்ச்சிக்கு, இந்த உள்ளாட்சி தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கையில், மாநில மக்களோடு பாஜக தங்களுக்கு தேவையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வாக்களித்து உள்ளனர்.

குறிப்பாக சபரிமலை அமைந்துள்ள பகுதியான பந்தனம்திட்டா மற்றும் சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் பந்தளம் பகுதியில் பாஜக மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது.

பந்தளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் பாஜகவுக்கு வெறும் 12 வாக்கு களும்,  பந்தனம் திட்டாவில 7 வாக்குகளும், புன்னப்புரா பகுதியில் 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. 3 இடங்களிலும் சேர்த்து மொத்தமே 29 வாக்குகள்தான் பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்குகள், வகுப்பு வாதத்தை ஊக்குவித்து வரும் பாஜகமீது  மக்கள் வைத்துள்ள எண்ணத்தின் வெளிப்பாடே இந்த வாக்குகள் என்பது தெளிவாகி உள்ளது.