மகாராஷ்டிரா : ஃபட்நாவிஸ் மீது குற்றம் சாட்டும் கட்சி மாறிய பாஜக தலைவர்

மும்பை

பாஜகவில் இருந்து தேசிய வாத காங்கிரஸுக்குக் கட்சி மாறிய பாஜக முன்னாள் அமைச்சர் ஏக்நாத் காட்சே முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீது குறை கூறி உள்ளார்.

மகாராஷ்டிர முந்தைய பாஜக அமைச்சரவையில் ஏக்நாத் காட்சே அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் ஊழல் புகார் காரணமாக பதவி விலகினார்.   அவர் அப்போதிலிருந்தே பாஜக தலைமை மீதும் அப்போதைய முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீதும் அதிருப்தியில் உள்ளார்.  இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்த மிகவும் உழைத்துள்ளார்.

 கடந்த சில நாட்களாகவே காட்சே கட்சியில் இருந்து விலகுவார் எனப் பலரும் கூறி வந்தனர்.  இன்று காட்சே பாஜகவில் இருந்து விலகி சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸில் இணைந்துள்ளார்.   சுமார் 68 வயதாகும் மூத்த அரசியல்வாதியின் இந்த கட்சி மாறிய நிகழ்வு பாஜகவுக்குச் சற்றே பின்னடைவை அளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏக்நாத் காட்சே செய்தியாளர்களிடம். “தேவேந்திர ஃபட்நாவிஸ் எனது வாழ்க்கையைப் பாழ் செய்துள்ளார். நான் நான்கு வருடங்களாக மன உளைச்சலுடன் இருந்தேன்.   என்னைக் கட்சியை விட்டு அனுப்ப முயல்வதாக அடிக்கடி கூறி வந்தேன்.  எனக்கு தற்போது பாஜகவை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை/  என் மீது பலாத்கார குற்றச்சாடு சுமத்தவும் முயற்சிகள் நடந்தன” என தெரிவித்துள்ளார்.