கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் சமூக வலைதள பதிவான பேஸ்புக் தளத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையான பதிவு வெளியாகி உள்ளது, அதில் உள்ள புகைப்படத்தை மேற்கோள்காட்டி  இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற தகவல் வெளியானது.

அந்த புகைப்படக் காட்சி  தவறானது என்றும், அது போஜ்புரி திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சி என்றும் பாரதியஜனதா நிர்வாகி விஜேதா மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஒரு புகைப்படம் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியாக, இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று பதிவிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் 4ந்தேதி இரு பிரிவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்ட சூழலில் இந்த புகைப்படம் மேலும் வன்முறையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று காவல்துறை யினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 4ந்தேதி, மேற்கு வங்காளம்  24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா பகுதியில், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து,மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் பல வாகனங்களும், உடைமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அந்தப் பகுதி முழுவதும் பதற்றான சூழல் நிலவியதை தொடர்ந்து, துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர்.

தற்போது அந்த பகுதிகளில் அமைதியான சூழ்நிலை உருவாகி வரும் நிலையில் மற்றொரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று, ஒரு பெண்ணை, ஆணொருவர் பலவந்த படுத்த முயலும் புகைப்படக் காட்சி வெளியாகி உள்ளது.

அதில், அந்த பெண்ணின் முந்தானையை ஆண் ஒருவர் இழுப்பது போன்றும், அந்த பெண் கதறியபடி முந்தானையை விடாமல் இழுத்து பிடிப்பது போன்ற காட்சி உள்ளது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்றும் உள்ளது.

இந்த காட்சியை முன்னிலைப்படுத்தி, மேற்கு வங்காளத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு இருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த பாரதியஜனதா கட்சி, புகைப்படம் ஒரு போஜ்புரி படத்தின் காட்சி என்று பாரதியஜனதா நிர்வாகி விஜேதா மாலிக் கூறி உள்ளார்.