ஆந்திராவில் எதிர்கட்சி இடத்தை பிடிக்க பாஜக ஆட்டம் ஆரம்பம்

அமராவதி:

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை வளைத்து, அங்கு எதிர்கட்சி அந்தஸ்தை பெற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.


ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அமோக வெற்றி பெற்று முதல்வரானார். தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியடைந்தது.

இந்நிலையில், தெலுங்கு தேச தலைவர்களை வளைக்கும் வேலையை பாஜக தொடங்கிவிட்டது.
தெலுங்கு தேசம் கட்சியின் விஜயவாடா எம்பி தன் பேஸ்புக் பக்கத்தில், நிதின் கட்காரியுடன் சந்தித்ததை பெருமைபட கூறி பதிவிட்டுள்ளார்.

கடந்த முறை விஜயவாடா தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நிதின் கட்கரி 100% ஆதரவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரைப் போல தெலுங்கு தேசம் முக்கிய பிரமுகர்கள் பாஜக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளில் ரெய்டு நடத்தக்கூடும் என்ற பயத்தில் பாஜகவுக்கு தாவ தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கு தேச கப்பல் மூழ்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஆந்திராவில் பாஜக ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்த திறமையானவர்களை பாஜக இழுத்துள்ளது. என்டிஆர் மகளும், முன்னாள் மத்திய அமைச்சருமான புரந்தரேஸ்வரி மற்றும் தற்போது பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் கன்னா லட்சுமி நாராயணா ஆகியோர் காங்கிரஸிலிருந்து வந்த வரவுகள்.
காங்கிரஸிலிருந்து தெலுங்கு தேசத்துக்கு சென்ற ஜேசி பிரதர்ஸ் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும் அவர்களது மகன்களை களத்தில் இறக்கினர். இவர்களும் தற்போது பாஜக பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவியவர் ஆதிநாராயண ரெட்டி. இவர் தற்போது பாஜகவுக்கு தாவ தயாராகிறார்.
கர்னூல் தொழிலதிபரும் தெலுங்கு தேச கட்சியின் ராஜ்யசபை எம்பியுமான டிஜி வெங்கடேஷ் மீதும் பாஜகவின் பார்வை விழுந்துள்ளது.

தெலுங்கு தேச கட்சியிலிருந்து யாரையும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சேர்த்துக் கொள்ளமாட்டார் என்பதால், பலரும் பாஜகவை நோக்கியே தவம் கிடக்கின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்களையும், அக்கட்சிக்கு நிதி அளிக்கும் நபர்களையும் வளைத்துப் போட்டால், சந்திரபாபு நாயுடு கட்சியை நடத்த முடியாது என்று பாஜக எண்ணுகிறது.

தொடர்ந்து முக்கிய பிரமுகர்களை இழுத்து, தெலுங்கு தேசம் கட்சியை பூஜ்யமாக்கிவிட்டால், ஆந்திராவில் எதிர்கட்சிக்கான இடத்தை நிரப்பி விடலாம் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது.

அதற்கேற்றாற்போல் காய்களை பாஜக நகர்த்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி