மோடி மாநிலத்தில் பா.ஜ.க.அரசுக்குச் சிக்கல்..

இந்திய வரலாற்றில் முதன் முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்ன சம்பவம்?

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்.

அங்கு விஜய ரூபானி தலைமையிலான பா.ஜ.க.ஆட்சி நடந்து வருகிறது.

அந்த  மாநிலத்தில் சட்ட அமைச்சராக இருக்கும் பூபேந்திரசிங்கின்  எம்.எல்.ஏ. தேர்வு செல்லாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

ஏன்? பூபேந்திரசிங், கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் டோல்கா தொகுதியில் போட்டியிட்டார்.

அவர் 327 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

’’ வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே பூபேந்திரசிங் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என்று தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் அஸ்வின், குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது உண்மை எனக் கூறியதுடன், அமைச்சர் பூபேந்திரசிங் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.

குஜராத் மாநிலத்தில், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த 20 பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்குகள் ஒவ்வொன்றாக விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த வழக்கில் , வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அந்த மாநில அரசுக்குச் சிக்கல் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சர் பூபேந்திரசிங்கை ,பா.ஜ.க.வில் இருந்து நீக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைச்சர், பலம் பொருந்தியவர் என்பதால், அவரை  நீக்கக் கட்சி மேலிடம் தயக்கம் காட்டுகிறது.

– ஏழுமலை வெங்கடேசன்