மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக உள்ளது : சரத் பவார்

சாலிஸ்கான், மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தாம் தோற்றுவிடுவோம் என்னும் பயத்தில் உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 21 ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.   இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ளன.   இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக சாலிஸ்கான் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துக் கொண்ட ஒரு பேரணி நடந்தது.

அந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “பாஜக அரசு விதி எண் 370 ஐ நீக்கி காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை விலக்கியது பாராட்டுக்குரியது.   ஆனால் அதே தைரியத்துடன் இந்த அரசு விதி எண் 371 ஐ ரத்து செய்து வடகிழக்கு மாநிலங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அந்தஸ்தை விலக்குமா?

மகாராஷ்டிர முதல்வர் ஒரு கூட்டத்தில் பாஜகவை இந்த தேர்தல் மல்யுத்தப் போரில் எதிர்க்க ஆளில்லை எனக் கூறி உள்ளார்.    நான் மகராஷ்டிரா மல்யுத்த வீரர்கள் சங்கத் தலைவர் ஆவேன்.   ஒரு மல்யுத்த வீரர் மற்றொரு வீரருடன் மட்டுமே மோதுவார்.  சாதாரண ஆட்களுடன் இல்லை.

தேர்தலில் எதிர்க்க ஆளே இல்லாத நிலையில் பிரதமர் எதற்கு 9 பேரணி நடத்தினார்?  உள்துறை அமைச்சர் எதற்கு 20 பேரணிகளும், முதல்வர் 50 பேரணிகளும் நடத்தினார்?   இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த பாஜகவுக்குத் தோல்வி பயம் வந்துள்ளது.   அதனால் தான் அவர்கள் பாஜகவில் இவ்வளவு தூரம் பயணம் செய்கின்றனர்.

நான் மாநிலத்துக்கு என்ன செய்தேன் என அமித்ஷா கேட்கிறார்.   நான் முதல்வராக இருந்த போது கடந்த 1978 ஆம் வருடம் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமல் படுத்தப்பட்டது.   அத்துடன் அப்போது உள்ளாட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.   ஆனால் இந்த அரசு நான் உறுப்பினராக இல்லாத ஒரு கூட்டுறவு வங்கி பண மோசடி வழக்கில் என்னைச் சேர்த்துள்ளது.” எனப் பேசி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி