காசிதாபாத்:

உ.பி. மாநிலம் காசிதாபாத்தில் ரமிலா மைதானத்தில் நடந்த பாஜக பேரணியில் தேசிய கொடிக்கு மேல் கட்சி கொடியை பறக்கவிட்ட காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேரணியில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்துகொண்டார். அந்த மைதானத்தில் அருகில் உள்ள அரசு அலுவலக கட்டடம் ஒன்றின் முகப்பு பகுதியில் தேசிய கொடியை பறந்து கொண்டிருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக தொண்டர்கள் சிலர் அந்த கட்டடத்தின் மீது ஏறி தேசிய கொடிக்கு மேல் பாஜக கொடியை கட்டி பறக்கவிட்டனர். அந்த மைதானத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த புகைப்படம் ஆன்லைனில் வைரலாக பரவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த கொடியை கீழே இறக்கினர். யோகி வருவதற்கு முன்பே கொடி அகற்றப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் இவ்வாறு கொடி பறக்கவிடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவில்லை.