தராபாத்

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக இளைஞரணி தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.   அந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.    அந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் செலவுகளில் பாஜக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ள விவரங்கள் வெளி வந்துள்ளன.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு மண்டல பாஜக தலைவர்களுக்குமாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுளது.   அவ்வாறு 531 மண்டல தலைவர்களுக்கு ரூ.10.6 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.   இதில் பெரும்பாலானோர் கட்சியின் இளைஞரணியான யுவ மோர்ச்சா அமைப்பின் தொண்டர்கள் ஆவார்கள்.

இந்த பணம் அவர்கள் எரிபொருள் செலவுக்காக அளிக்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.   இவ்வாறு கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரையிலான கால கட்டங்களில் மேலும் பல தொண்டர்களுக்கும் அடிப்படை செலவுக்கு என ஏராளமான பணம் அளிக்கப்பட்டுள்ளது.

அதைத் தவிர ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ரூ10 முதல் ரூ.15 லட்சம் வரை அளிக்கப்பட்டுள்ளது.   இதில் ரூ.12.5 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.   இவ்வாறு மொத்தம் ரூ.23.1 கோடி வரை பாஜக தனது கட்சி தொண்டர்களுக்கு செலவிட்டுள்ளது.

ஆனால் இவ்வாறு பணம் அளிக்கப்பட்ட நான்கு மண்டலங்களிலும் சேர்த்து பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.