வாராக்கடன் வசூல் : தவறான தகவல் அளித்த பாஜக

டில்லி

வாராக்கடனில் ரூ. 4 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக பாஜக அறிவித்துள்ள நிலையில் ரூ. 15786 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் வருடம் திவாலாகும் நிறுவன சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.   அது குறித்து பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று சமீபத்தில் பதியப்பட்டது.   அதில் ”பாஜக அறிமுகப் படுத்திய திவாலாகும் சட்டங்கள் மாற்றியமைப்பு 2016 இன் படி பல நிறுவனங்களின் வாராக்கடன்கள் வசூலிக்கப் பட்டுள்ளன.  மொத்தம் இருந்த ரூ. 9 லட்சம் கோடி வாராக்கடனில் ரூ.4 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது”  என தெரிவித்திருந்தது

பாஜகவின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கமான @பிஜிபி4இந்தியா என்னும் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை இந்த தகவல் வெளீயானது.  இந்த தகவலை பல பாஜக உறுப்பினர்களும் ஒரிசா மாநில பாஜகவும் பகிர்ந்தன.   இது நாடெங்கும் பரவலாக பேசப்பட்டது

ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி கடந்த 2016-17 மற்றும் 2017-18ன்  இதுவரையிலான காலகட்டத்தில் மொத்தமுள்ள வாராக்கடனில் ரூ.15786 கோடி வசூல் செய்யபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.   ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது இந்த சட்ட மாறுதல் அமுலாக்கப்பட்ட ஜனவரி 2017 முதல் ஆன காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 முதல் 2018 வரையிலான கால கட்டங்களில் மொத்தம் இருந்த வாராக்கடனில் ரூ. 29243 கோடி மட்டுமே இதுவரை வசூல் ஆகி உள்ளது.   இந்த வருடம் மார்ச் மாதம் 27ஆம் தேதி நிதி அமைச்சகம் இந்த ரிசர்வ் வங்கியின் அறிக்கையை பாராளுமன்றத்தில்வெளியிட்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கையையும் பாஜகவின் டிவிட்டர் செய்தியையும் ஒப்பிட்டு சில ஆங்கில செய்தித் தாள்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.   அந்த செய்தித் தாள்களில் செய்தி வந்த பிறகு பாஜகவின் டிவிட்டர் பதிவு  நீக்கப்ப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜகவின் தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைப்பு தலைவர் அமித் மாலவியா, “இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.   நான் இந்த செய்தி வளையத்துக்குள் வரவில்லை” எனக் கூறி உள்ளார்.