புதுடெல்லி:

கடந்த 2017-18- ம் ஆண்டில் முகம் தெரியாத நபர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில், 80 சதவீதம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.


தேர்தல் நிதி மற்றும் ரூ 20 ஆயிரத்துக்கும் குறைவாக நன்கொடை கொடுப்பவர்களின் பெயர்களை அரசியல் கட்சிகள் வெளியிடுவதில்லை. இதனால் முகம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் 50 சதவீதமான நன்கொடை குறித்த விவரத்தை கண்டறிய முடிவதில்லை.

இது குறித்து தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஜனநாய மறு சீரமைப்பு அமைப்பு கூறியிருப்பதாவது:

கடந்த 2017-18 ம் ஆண்டுகளில் ரூ.553 கோடி வரை முகம் தெரியாத நபர்களிடம் இருந்து பாஜகவுக்கு நன்கொடை கிடைத்துள்ளது.

தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்துள்ள நன்கொடையை விட, இது 4 மடங்கு அதிகமாகும்.

தங்களுக்கு முகம் தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடையாக வந்ததாக 7 தேசிய கட்சிகளும் அறிவித்த தொகை ரூ.689.44 கோடி. இதில் பாஜகவுக்கு மட்டும் ரூ.553.38 கோடி வந்துள்ளது.

தேர்தல் நிதி, கட்சி நன்கொடை, நிவாரண நிதி, அத்தியாவசிய வருவாய், தன்னார்வர்கள் நன்கொடை, கூட்டங்கள், பேரணியிலிருந்து கிடைக்கும் நிதி ஆகியவற்றைத்தான், அரசியல் கட்சிகள் முகம் தெரியாதவர்களிடம் வந்த நன்கொடை என்று கணக்கு காட்டுகின்றனர்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ரூ.20 ஆயிரத்துக்கு கீழே நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

இதனால் 50 சதவீத நன்கொடையை யார் கொடுத்தது என அடையாளம் காண முடிவதில்லை. நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான். எனினும், இச்சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு யாரும் பதில் அளிப்பதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர, ஏனைய 6 தேசிய கட்சிகளின் மொத்த வருவாய் கடந்த 201-18 ல் ரூ. 1,293.05 கோடி. முகம் தெரிந்த நபர்களிடம் இருந்து பெற்ற நன்கொடை ரூ.467.13 கோடி. சொத்து விற்பனை, உறுப்பினர் சேர்க்கை கட்டணம், வங்கி வட்டி ஆகியவை மூலம் கிடைக்கும் வருவாய் மட்டும் ரூ.136.48 கோடி.

கடந்த 14 ஆண்டுகளில் முகம் தெரியாத நபர்களிடமிருந்து அனைத்து தேசிய கட்சிகளும் ரூ. 8,721.14 கோடி நன்கொடை பெற்றுள்ளன.

இவ்வாறு ஜனநாய மறு சீரமைப்பு அமைப்பு கூறியுள்ளது.