இஸ்லாமியர்களுக்கு எதிராக கவனம் செலுத்துவதிலேயே பாஜகஅரசு தீவிரம் காட்டி வருகிறது! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை:

த்திய பாஜக அரசு பாஜகஅரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களிலேயே கவனம் செலுத்தி வருகிறது என்றும்,  இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்பி விடுகிறது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தியா இன்டர்நேஷனல் சென்டர் அமைப்பின் சார்பில் ‘நாட்டின் இன்றைய நிலை – நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  இந்த கலந்துரையாடலை இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் நடத்தினார். இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஐந்தரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டின் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டியவர்,  2001-02, 2008-09, 2012-13 ஆகிய காலகட்டங்களிலும் நம் நாட்டில் பொருளாதார தேக்கநிலை இருந்து, அதில் இருந்து நாடு எளிதில் மீண்டுவிட்டது.  ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு என்பது சாதாரணமானது அல்ல. ‘இந்தியாவின் பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறது’ என்றார்.

இதுகுறித்து, மோடி அரசில் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் ஆய்வுக் கட்டுரையே எழுதியுள்ளார். அப்படியானால் மோடி ஆட்சியில் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசம் என்பதை நாம் அறியலாம், என்று கூறியவர், நாட்டின் வளர்ச்சியில் கவனம், முதலீடு களை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஓர் அரசு கவனம் செலுத்தினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளரும் என்று கூறினார்.

அரசியலில் திறம்பட செயலாற்றும் பிரதமர், பொருளாதார வல்லுநர்களையும் சந்தித்து கருத்து கேட்க தயங்குவது ஏன்? மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 6 பொருளாதார வல்லுநர்களை தன்னுடன் வைத்திருந்தார். அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாகூட,  மன்மோகன் சிங் பேசும் போது நான் கவனிப்பேன் என்று கூறியிருக்கிறார்… . அப்படிப்பட்டவரை மோடி அழைத்து ஆலோசனை கேட்டிருக்கலாமே என்றவர், பா.ஜ.க ஆட்சியில் செய்யப்பட்ட மிகப்பெரிய தவறுகள் ஜிஎஸ்டி வரி விதிப்பும், பணமதிப்பிழப்பும். இதுவரை எந்த ஒரு பொருளாதார வல்லுநரும் பணமதிப்பிழப்பு சரி என்று கூறவில்லை.

ஆனால் பாஜக அரசோ,  2-வது முறையாக பொறுப்பேற்ற கடந்த 7 மாதங்களில் முத்தலாக் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம் என்று மதரீதியாக மக்களை பிளவு படுத்தும் அரசியலிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்து ராஷ்டிரம் கொள்கையை நிலை நிறுத்து வதிலும்தான் கவனம் செலுத்தி வருவதாகவும், முத்தலாக், குடியுரிமை, ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து என வரிசையாக இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்று வதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்பிவிடும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

மத்திய அரசின் அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியவர், பிரதமர் என்ன சொல்கிறாரோ, பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்ன குறிப்பு வருகிறதோ, அதன்படிதான் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.