மதுரை

சங்பரிவார் திட்டங்களை செயல்படுத்தும் விதமாகவே பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார்.

எதையும் நடைமுறைப்படுத்தும் பெரும்பான்மை இருப்பதால் சர்வாதிகார முறையில் கருத்து
தெரிவிக்கிறார்கள் என்றும் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் போது பாஜக அரசு, ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்தவர்,  அப்போது இருந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, இது இந்தியத் தன்மையையும் ஜனநாயகத்தையும் அழிக்கின்ற முயற்சி என்ற சுட்டிக்காட்டி வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், மீண்டும் அவர்கள் ஆட்சியில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படை யில் தான்தோன்றித்தன மான முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் அரசு எடுத்திருக்கின்ற முடிவு அதை உறுதிப்படுத்துகிறது என்றவர், தற்போது  வெளிப்படை யாகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரே தேசம் ஒரே மொழி என்ற கொள்கை இருந்தால் தான் இந்தியா வல்லரசு நாடாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் அவர்களின் நீண்ட கால கனவுத் திட்டம். அவர்களின் வழிகாட்டு இயக்கமாக இருக்கிற ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளின் செயல் திட்டங்களை செயல்படுத்துகிற அரசாகத்தான் பாஜக அரசு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்றவர்,  ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்றால் ஒரே தேசம்; ஒரே மதம், ஒரே தேசம்; ஒரே மொழி என்று பொருள். இந்தி மொழியைத் தவிர வேறு மொழி எதுவும் இருக்கக்கூடாது இந்து மதத்தைத் தவிர வேறு மதம் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் இறுதி இலக்கு. அதற்கேற்ப கல்விக் கொள்கையையும் அவர்கள் மாற்றி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது” என்று தெரிவித்தார்.

மேலும் பேனர் விழுந்து இளம்பெண் இறந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன்,  அதற்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார்.