டில்லி

த்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வேலையின்மையை பாஜக அரசு விளம்பரத்தால் மறைத்து வருவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்

ஊரடங்கு உத்தரவு காரணமாகப் பல புலம் பெயர் தொழிலாளர் வேலை வாய்ப்பை இழந்தனர்.  அவர்கள் இதையொட்டி  பல இன்னல்களுக்குப் பிறகு சொந்த மாநிலத்துக்குச் சென்றனர்.  தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பலர் மீண்டும் தாங்கள் முன்பு பணி புரிந்த மாநிலத்துக்குத் திரும்ப வந்துள்ளனர்.

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.  இதற்கு அம்மாநிலத்தில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மையே காரணம் எனப் பலரும் கூறி வருகின்றனர்.   ஆனால் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு இதை வலுவாக மறுத்து வருகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில்,  ”உபி மாநிலத்தில் வேலை வாய்ப்பு கிடையாது.  ஆகவே சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் வேலை செய்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.  இந்த மாநிலத்தில் இருந்து ஒன்றரை லட்சம் இளைஞர்கள் வேலை தேடி மும்பை சென்றுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.  ஆனால் மாநில பாஜக அரசு இவற்றை வெற்று விளம்பரங்கள் மூலம் மறைத்து வருகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.