பாஜக அரசு பணக்காரர்களுக்கான அரசு : ராகுல் காந்தி

பல்பூர்

பாஜக அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே பாடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

நவம்பர் 28 ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.  தேர்தல் பிரசாரத்தை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தொடங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.     நேற்று பழங்குடியினர் அமைப்பான ஆதிவாசி ஏக்தா பரிஷத் அமைப்பின் நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார்.

அந்த நிகழ்வில் ராகுல் காந்தி, “தற்போதைய ஆட்சியில்  பழங்குடியினர் நலன் பற்றி கண்டுக் கொள்வதில்லை.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினர் சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வந்து அவர்களை அதன் மூலம் முன்னேற்றுவோம்.  நான் 2004 ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருக்கிறேன்.   ஆனால் எப்போதும் நான் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பொய் வாக்குறுதி அளித்தில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் அனைத்து கருப்புப் பணமும் சட்டபூர்வமாக மாற்றப்பட்டு விட்டது.   ஆனால் அவ்வாறு மாற்றியவர்கள் யாரையும் இந்த பாஜக அரசு கைது செய்யவில்லை.   இவ்வளவு பணம் வெளிவந்தும் யாருக்கும் ரூ.15 லட்சம் தரவில்லை.

வைர வியாபாரி நிரவ் மோடி நமது பணமான ரூ.35000 கோடியை திருடிவிட்டு வெளிநாட்டில் பதுங்கி உள்ளார்.  மற்றொரு தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.10000 கோடியை திருடி விட்டு நிதி அமைச்சரிடம் தெரிவித்து விட்டே நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் இருக்கிறார்.   இது போன்ற பணக்காரர்களுக்கு மட்டுமே பாஜக அரசு பாடுபட்டு வருகிறது.    ஏழைகளுக்கும், பழங்குடியினருக்காகவும் சிறிதளவாவது பாஜக அரசு உழைக்க வேண்டும்” என உரையாற்றினார்.