ஜி எஸ் டி விளம்பரத்துக்கு ரூ. 132 கோடி செலவு செய்த பாஜக அரசு

டில்லி

ஜி எஸ் டி குறித்த விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.132.38 கோடி செலவு செய்துள்ளது.

கடந்த வருடம் ஜூலை 1 முதல் ஜி எஸ் டி வரி முறை  பாஜக அரசால் அமுலாக்கப்பட்டது.   இந்த ஒரு முனை வரி விதிப்பால் சுங்கம், சேவை வரி, வாட் உள்ளிட்ட பல வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரியாக மாற்றப்பட்டது.   அப்போது இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முற்பட்டது.   அதற்காக பல ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

ஜி எஸ் டியின் விளம்பர தூதராக பாலிவுட்டின் மிகப் புகழ் பெற்ற நடிகரான அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டார்.    இது தவிர செய்தித்தாள்களில் பல முழுப்பக்க விளம்பரங்கள் வெளியாகின.   இந்த விளம்பரங்களில் ஜிஎஸ்டி குறித்த விளக்கங்கள், விதிமுறைகள் ஆகியவை விவரிக்கப்பட்டு இருந்தன.

இந்த விளம்பரங்களுக்கு ஆன செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.   அதற்கு கிடைத்த தகவலின்படி தகவல் மற்றும் விளம்பரத்துறையின் மூலம் ரூ. 127 கோடி செலவாகி உள்ளதாகவும் இது தவிர விளம்பர பதாகைகள் அமைக்க ரூ. 5 கோடிக்கு மேல் செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.