அந்தமான் தீவுகளில் மூன்று தீவுகள் பெயரை மாற்றும் பாஜக

டில்லி

ந்தமான் தீவுகளில் உள்ள மூன்று தீவுகளுக்கு மத்திய பாஜக அரசு பெயர் மாற்ற உள்ளது.

பாஜக அரசு பல மாநில நகரங்களின் பெயர்களை மாற்றி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டினர் மற்றும் இஸ்லாமியப் பெயர்களை மாற்றி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் அலகாபாத் நகரம் தற்போது பிரயாக் ராஜ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதே போல் உத்திரப் பிரதேச மாநிலம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

ஜப்பான் படைகளின் துணையுடன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயருடன் போர் தொடுத்து இந்தியாவைக் கைப்பற்றி சுதந்திர நாடாக்க முயற்சி செய்தார். அந்த முயற்சியில் அவரது படை முதலில் பிடித்தது அந்தமான் தீவுகள் ஆகும். அவர் அங்கிருந்த பிரிட்டன் கொடியை இறக்கி அந்தமானில் இருந்து சுதந்திர இந்தியா தொடங்குவதாக அறிவித்தார்.

இதை ஒட்டி  அந்தமான் தீவுகளில் மூன்று தீவுகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு எனவும், நெயில் தீவுக்கு சாகித் தீப் தீவு எனவும் ஹாவெலாக் தீவுக்கு ஸ்வராஜ் தீப் தீவு எனவும் பெயர் மாற்றப்பட உள்ளது.

சுபாஷ் சந்திர போஸ் இந்த தீவுகளை பிடித்ததன் நினைவாக இந்தப் பெயர்கள் மாற்றப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேதாஜி இந்த தீவுகளுக்கு சாகித் தீப் மற்றும் ஸ்வராஜ் தீப் என அப்போது பெயரை மாற்றி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..