அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு!

சென்னை

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,   தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்க அவர் வந்துள்ளது தெரிய வந்தது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது இளைய மகளுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. அதற்கான  திருமண அழைப்பிதழை  அனைத்து கட்சித்தலைவர்கள், கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.

ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், தேசிய தலைவர்களுக்கு வழங்கிய நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட முக்கிய திரையுலக பிரபலங்களுக்கும்  நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.

இந்த நிலையில், இன்று காலை  (நவ.2) திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அண்ணா அறிவாலயத்தில் தன் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக திமுக வெளியிட்ட பத்திரிகை செய்தியில், “மு.க.ஸ்டாலினை இன்று, காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் சந்தித்து, தனது இல்லத் திருமண விழா அழைப்பிதழை அளித்தார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.