சந்திரபாபு நாயுடுவை கண்டு பாஜக பதற்றம் கொண்டுள்ளது: கனிமொழி

--

சென்னை:

பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மோடி அரசு பதற்றம் அடைந்து உள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்த நிலையில்,செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி,  சந்திரபாபு நாயுடுவின்  எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கை மற்றும் ஸ்டாலின் சந்திரபாபுநாயுடு சந்திப்பு பா.ஜனதாவை பதற்றம் அடைய வைத்துள்ளது என்று கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள  கனிமொழி,  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளதை போல, மதவாத பா.ஜனதாவையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.

You may have missed