டில்லி:

வெறுப்புணர்வு பேச்சுக்கு எதிரான வழக்கில் பாஜக.வினர் அதிகளவில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘பாஜக.வில் உள்ள அதிக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். 768 எம்.பி.க்கள், 4,077 எம்.எல்.ஏ.க்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்தது. இதில் 1,580 அதாவது 33% எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகள் இருப்பத தெரியவந்துள்ளது.

இதில் 48 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

பாஜக.வை சேர்ந்த 12 எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர். வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் முதலிடத்தில் உள்ளனர்.

15 லோக்சபா எம்.பி.க்கள், 43 எம்.எல்.ஏ.க்கள் என 58 பேர் வெறுப்பு பேச்சு வழக்குகளில் சிக்கியுள்ளனர். பெறுப்புணர்வு பேச்சுக்கு எதிரான வழக்குகளில் பாஜக.வுக்கு தான் முதலிடம். இக்கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்கள் உள்பட 27 பேர் மீது இந்த வழக்கு உள்ளது.

அனைத்து இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளுக்கு தலா 6, தெலுங்குதேசம், சிவசேனா தலா 3, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த தலா 2 பேர் மீதும் வழக்கு உள்ளது. மத்திய அமைச்சர் உமாபாரதி மற்றும் 8 மாநில அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.