மும்பை:

பாஜக.விடம் ஓட்டுக்களை வாங்க பணம் இருக்கிறது. ஆனால் ஆக்சிஜனுக்கு செலுத்த பணம் இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உ.பி.மாநிலம் கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 64 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து அக்கட்சி சார்பில் பாய்ந்தர் கிழக்கு பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில்,‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின்னரும் இதர கட்சிகளை உடைத்து ஆட்சி அமைக்க ஓட்டுக்களை பெற பாஜக பண விநியோகம் செய்கிறது. ஆனால் ஆக்சிஜன் வாங்க அவர்களிடம் பணம் இல்லை.

மக்கள் மரணம் குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லை. உயிருடன் இருப்பவர்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். கோராக்பூர் துயர சம்பவம் தொடர்பாக இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாஜ கூறுகிறது. ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.