ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு கபில்தேவ், மாதுரி தீக்சித் பெயர் பரிசீலனை….பாஜக தீவிரம்

டில்லி:

ராஜ்யசபாவுக்கு 10 முதல் 12 பேரை வேட்பாளராக நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ், நடிகை மாதுரி தீக்சித், மராத்தி நாடக ஆசிரியர் பாபாசாகிப் புரன்தரே ஆகிய பிரபலங்கள் இடம்பெறுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இது ஆகஸ்ட் 10 வரை நீடிக்கும். அதற்கு முன்பு இவர்களை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் சமயத்தில் இந்த கூட்டத் தொடர் தொடங்குவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சரவை குழு கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டார். இதில் கூட்டம் நடக்கும் தேதிகள் உள்ளிட்டவை பரிந்துரை செய்யப்பட்டது.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் கூறுகையில்,‘‘எதிர்கட்சிகளின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். இந்த குளிர்கால கூட்டத் தொடரில் முக்கியமான விஷயங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

6 மசோதாக்கள் விவாதத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதனால் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முத்தலாக் மசோதாவுக்கு அனைவரும் ஒப்புதல் வழங்க வேண்டும்’’ என்றார்.

மேலும், துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் பதவி காலம் முடிவடைகிறது. அதனால் புதிய துணை சபாநாயகர் நியமன விவகாரமும் இதில் இடம்பெறவுள்ளது.