Random image

ஆட்சிக்கு வந்ததும் இந்துத்வா கொள்கையை பாஜக தூக்கி எறிந்துவிட்டது…சிவசேனா

மும்பை:

ஆட்சிக்கு வந்ததும் இந்துத்வா கொள்கையை பாஜக தூக்கி எறிந்துவிட்டது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா கடந்த சில காலமாக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. தொடர்ந்து பாஜக.வை விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இன்று ஒரு தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,‘‘காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களை பயன்படுத்தியது போலவே பா.ஜ.க இந்துக்களை பயன்படுத்திக்கொண்டது. ராமர் கோவில் கட்டுவது உள்ளிட்ட இந்துக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியை கூட பா.ஜ.க நிறைவேற்றவில்லை.

பா.ஜ.க.வில் தீவிர இந்துத்வா கொள்கைகள் இருந்தது. ஆனால் அந்த தீவிரம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மட்டுமே இருந்தது. ஆட்சிக்கு வந்ததும் குறைந்துவிட்டது. பா.ஜ.க.வும் காங்கிரஸ் போல தான். காங்கிரஸ் பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு அடி பணிந்து செயல்படுகிறது. ஆனால் பா.ஜ.க கொள்கையில் இருந்து விலகி மதசார்பற்ற இந்துக்களை உருவாக்க முயற்சி செய்கிறது.

இந்துக்கள் ஒன்றாக இணைந்து தீவிரமாக செயல்பட்டதால் தான் மோடி பிரதமர் ஆனார். ஆனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது? சிவசேனாவுடன் கூட்டணியை முறித்ததன் மூலம் இந்துத்வாவின் முதுகில் குத்தப்பட்டது.

இந்துத்வா குறித்தும், நாடு குறித்தும் தீவிரமாக பேசியவர்கள் பா.ஜ.க.வின் எதிரிகளாகிவிட்டனர். இந்துத்வா என்ற ஏணியில் ஏறி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பா.ஜ.க வேலை முடிந்ததும் ஏணியை தூக்கி எறிந்துவிட்டனர். சொந்த நாட்டிலேயே இந்துக்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுவதை பார்த்து ஆட்சியாளர்கள் மவுனமாக உள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.