கொல்கத்தா

மோடியின் தேர்தல் பேரணிக்கு ஆதரவாளர்களை அழைத்து வர பாஜகவினர் 4 ரெயில்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  இந்த வகையில் நேற்று கொல்கத்தா நகரில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பேரணியில் மோடி கலந்துக் கொண்டார்.   அந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்துக் கொண்டதாக பாஜகவினர் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவின் புகழ்பெற்ற பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த இந்த பேரணி மோடி கலந்துக் கொண்ட முதல் பேரணி ஆகும்.   இந்த மைதானத்தில் கடந்த 1972 ஆம் வருடம் நடந்த வங்கதேச சுதந்திர பேரணி உள்ளிட்ட பல சரித்திர நிகழ்வுகள்  நடந்துள்ளன.   இந்த பேரணியில் சுமார் 8 லட்சத்துக்கு மேல் கலந்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வங்க மொழி பத்திரிகை ஆனந்த பஜார் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ”மோடியின் இந்த பேரணிக்கு ஜார்கிராம், லால்கோலா,புருளியா, மற்றும் ரம்புர்ஹட் ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதற்காக பாஜக நான்கு ரெயில்களை வாடகைக்கு எடுத்துள்ளது.    முழு ரெயிலையும் குத்தகை முறையில் வாடகைக்கு எடுத்துள்ள பாஜக வாடகையாக ரூ.53 லட்சம் அளித்ததாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது.” என செய்திகள் வெளியிட்டுள்ளது.