மும்பை:

மூத்த தலைவர்களை பாஜக தலைமை புறக்கணிக்கிறது என்று  முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த அரசியல் அவலங்கள் உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் முடிவுக்கு வந்தது. இன்று சிவசேனா தலைமையில், என்சிபி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது மாநில அமைச்சர்களாக பதவி வகித்த மூத்த பாஜக தலைவர்கள் பாஜக தலைமையின் நடவடிக்கைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். மாநிலத்தின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஏக்நாத் காட்சே (Eknath Khadse) பாஜக தலைமையை பகிரங்கமாக விமர்சித்து உள்ளார்.

கடந்த ஆட்சியின்போது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக  இருந்த காட்சே, மேத்தா, பவன்குலே மற்றும் தவ்தே ஆகியோருக்கு தற்போது நடைபெற்று முடிந்த (2019) சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு தரவில்லை என்று பகிரங்கமாக விமர்சித்து உள்ளவர், கட்சி எங்களுக்கு டிக்கெட் கொடுக்க முடியாவிட்டாலும், அவர்கள் எங்களை புறக்கணித்திருக்கக்கூடாது” என்று என்றும் குற்றம் சாட்டினார்.

என்னைப் போன்ற மூத்த தலைவர்களான, பிரகாஷ் மேத்தா, சத்ரசேகர் பவன்குலே, வினோத் தவ்தே போன்ற தலைவர்களை பாஜக புறக்கணிக்காமல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருந்தார், சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மேலும்  20 முதல் 25 கூடுதல் இடங்களை வென்றிருக்கும் என்று தெரிவித்தார்.

“மாநிலத்தில் பாஜகவை வெற்றிபெற உதவியவர்களை பாஜக தலைமை புறக்கணித்து விட்டது என்று கூறியவர்,  இந்த கட்சியை சிறந்ததாக மாற்ற நாங்கள் உழைத்தோம்,  நான் 40-42 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துள்ளதால், பாஜகவில் தற்போது நடப்பது குறித்து பேச தனக்கு உரிமை உள்ளது என்றும் கூறினார்.

288 இடங்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 105 இடங்களை வென்றது, ஆனால்,  2014 தேர்தலில் 122 இடங்களைப் பிடித்தது என்று கூறியவர்,  பாஜக, சிவசேனா கூட்டணியாக சந்தித்து, 161 இடங்களை பெற்றுள்ள நிலையில், அதிகாரப் பகிர்வு காரணமாக, கூட்டணி முறியும் நிலை உருவாகி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோயுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில், அஜித்பவாருடன் இணைந்து ஆட்சி அமைக்கும் பட்னாவிசின் முடிவை தான் ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்துள்ள காட்சே, அஜித் பவாரை பாஜக ஆதரிக்கக் கூடாது என்பது எனது கருத்து. அவர் நீர்ப்பாசன ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், எனவே நாங்கள் அவருடன் கூட்டணி வைத்திருக்கக்கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.

ஏக்நாத் காட்சேவின் பாஜக தலைமை மீதான விமர்சனம் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய பாஜக செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி, “… காட்சே  கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்து உள்ளார்.