சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்களை ஆதரிக்கும் பாஜக : மேகாலயா முன்னாள் முதல்வர்

கௌகாத்தி

மேகாலயாவில் சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்களுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக மேகாலய மாநில முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தெரிவித்துள்ளார்.

மேகாலயா மாநிலத்தில் அதிக அளவில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கபட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் மைனர் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். சமீபத்தில் இத்தகைய ஒர் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ள நீர் புகுந்து அங்கு பணி புரிந்த சிறுவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர், பல நாட்களுக்குப் பிறகு அந்த சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

மேகாலயா மாநில முன்னாள் முதல்வர் முகுல் சங்மா கவுகாத்தியில் செய்தியாளர்களிடம், “மேகாலயா மாநிலத்தில் வெகு காலமாக சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. எங்கள் அரசு கடந்த 2010 ஆம் வருடம் பொறுப்பேற்றது. அதன் பிறகு எங்கள் அரசு நிலக்கரி சுரங்க உரிமையாளர்களிடம் பேசி நிலக்கரி சுரங்கங்கள் குறித்த கொள்கைகளை உருவாக்கினோம். அதன் பிறகு சட்ட விரோதமாக நடந்து வரும் பல நிலக்கரி சுரங்கங்களை மூடினோம்.

ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சியின் கூட்டணி அரௌ அமைந்த பிறகு மீண்டும் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் இயங்கத் தொடங்கின. இதற்கு அரசு பொறுப்பில் உள்ள பாஜகவினர் ஆதரவு அளித்து வருகின்றனர். அவ்வாறு சட்ட விரோதமாக நடந்து வந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மாட்டிய சிறுவர்களை குறித்து இந்த அரசு கவலை கொள்ளவில்லை.
பல்வேறு தரப்பினர் போராட்டத்துக்கு பின் அரசு மீட்பு நடவடிக்கைகலை தொடங்கியது. இந்த தாமதத்தினால் அந்த சிறுவர்கள் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இது மீண்டும் நிகழாமல் தடுக்க சட்ட பூர்வமான நிலக்கரி சுரங்கங்கள் மட்டுமே இயங்க வேண்டும். அதை இன்னும் ஆறு மாதங்களுக்கு அரசு செயல் படுத்துமா?” என கேள்விகள் எழுப்பி உள்ளார்.