பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி, அரசியலுக்காக எதையும் செய்பவர்கள்: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க வளர்ச்சி குறித்து அமித் ஷா கூறியது எல்லாம் அனைத்தும் பொய் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி, அரசியலுக்காக எதையும் செய்பவர்கள்.

மேற்குவங்கத்தின் வளர்ச்சி குறித்து அமித் ஷா சொன்னவை அனைத்தும் பொய்கள். இங்கு தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறுகிறார். ஆனால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் மேற்குவங்கம் முதலிடத்தில் இருக்கிறது.

பாஜக தலைவர் அமித் ஷா தொடர்ந்து பொய்களை அடுக்குகிறார். அவர் உள் துறை அமைச்சர் என்பதை மறந்துவிடக் கூடாது. அமைச்சராக இருந்து கொண்டு பொய் பேசக்கூடாது.

நாட்டு மக்களின் தலைவிதியை பாஜகவால் தீர்மானிக்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்த விதியை தீர்மானிக்கட்டும். நாங்கள் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிரானவர்கள் என்று தெரிவித்தார்.