போபால்

த்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவினர் பேரம் பேசியதாக முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தங்கள் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களைக் குதிரைப் பேரம் மூலம் தங்கள் பக்கம் இழுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  அவ்வரிசையில் இதற்கு முன்பு கோவா மாநிலத்தையும் தற்போது கர்நாடகா மாநிலத்திலும் இது போல் நடந்ததாகக் குற்றம் கூறுகின்றனர்.

தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.   இந்த மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.  அவர், “மாநில பாஜக தலைவர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் நரோத்தம் மிஸ்ரா இடையே ஒருமித்த கருத்து உண்டாகி இருக்கிறது.

அவர்கள் மீண்டும் முதல்வர் மற்றும் துணை முதல்வராகும் கனவில் உள்ளதால் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க முற்படுகின்றனர்.  இருவரும் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரிடமும் ரூ.25 கோடி முதல் ரூ.35 கோடி வரை பேரம் பேசுகின்றனர்.   இதில் முதல் தவணையாக ரூ.5 கோடி, மாநிலங்களவை தேர்தல் நேரத்தில் கட்சி மாறி வாக்களித்தால் இரண்டாம் தவணை மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி கலைந்ததும் மூன்றாம் தவணை அளிக்கபடும் எனப் பேரத்தில்  கூறி உள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதை முன்னாள் முதல்வரும் மாநில பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் மறுத்துள்ளார்.  அவர், “திக்விஜய் சிங் தற்போதைய முதல்வர் கமல்நாத்தை பிளாக் மெயில் செய்ய இவ்வாறு கூருகிறார்.  அவர் பொய்ச் செய்திகளை பரப்புவதில் கை தேர்ந்தவர்.  தான் கட்சிக்கும் ஆட்சிக்கும் முக்கியமானவர் என்பதைக் காட்ட மற்றும் முதல்வரை மிரட்ட இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்” எனக் கூறி உள்ளார்.