டெல்லி: ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் பிரியங்கா காந்தி. அதில் அவர் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்காகவும் போராடும் ஹர்திக் படேலை பாஜக பலமுறை துன்புறுத்துகிறது.

அவர் மக்களின் குரலை உயர்த்தியுள்ளார். அவர்களுக்கு வேலை கேட்டார், உதவித்தொகை கோருகிறார். விவசாயிகள் இயக்கத்தை தொடங்கினார். பாஜக இதையெல்லாம் தேசத்துரோகம் என்று குறிப்பிடுகிறது என்று கூறியிருக்கிறார்.

ஆகஸ்ட் 25, 2015ம் ஆண்டு படேல் சமூகம் ஒன்றுகூடியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஹர்திக் படேல் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

தேசத்துரோக குற்றச்சாட்டு தொடர்பாக அகமதாபாத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக அவர் தவறினார். இதையடுத்து, ஜன. 24ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.