மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளில் இடம் பெற்ற எம் பிக்களில்  பாஜகவினருக்கு முதல் இடம்

டில்லி

களிருக்கு எதிரான குற்றங்கள் மீதான வழக்குகளில் சிக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ணிக்கையில் பாஜக முதல் இடத்தில் உள்ளதாக ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் போது அனைத்து வேட்பாளர்களும் தங்கள் மீதான வழக்கு விவரங்கள் குறித்து விவரம் அளிக்க வேண்டும் என்பது விதிமுறைகளில் ஒன்றாகும்.   ஆயினும் இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெறாத வரையில் அவர்களுக்குப் போட்டியிடத் தடை இல்லை என்பதும் மற்றொரு விதியாகும்.  அசோசியேஷன் ஃபார் டிமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்  ஜனநாயக சீர்திருத்த அமைப்பு இது குறித்து விவரங்கள் வெளியிட்டுள்ளன.

அதில், “2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப்பின் 506 உறுப்பினர்கள் வேட்புமனுவை ஆய்வு செய்ததில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள். மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உடையவர்களாக இருந்தார்கள்.  ஆனால் 2019-ம் ஆண்டில் 540 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்புமனுவில் உள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்ததில் அதில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.   அதாவது  சுமார் 850 சதவீதம் உயர்ந்துள்ளது.

தற்போது 756 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  4063 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பிரமாணப்பத்திரம் ஆய்வு செய்யப்பட்டதில் 78 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது தெரியவந்தது. இதில் 18 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 58 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

இந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைச் சந்தித்து மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள572 வேட்பாளர்களில் ஒருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

அதிக பட்சமாக பாஜக சார்பில் 21  உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.    அடுத்ததாக காங்கிரஸ் கட்சியில் 16 உறுப்பினர்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் 7 பேரும் வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.  மாநிலக் கட்சிகளில் திமுகவில் 2 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ள 66 பேருக்குக் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. அதைப்போல்  காங்கிரஸ் கட்சி 46 பேருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி 40 பேருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல் பிரமாண பத்திரம் அளிக்கும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 15 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் 9 பேரும், ஆம்ஆத்மி வேட்பாளர்கள் 8 பேரும், டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களில் 6 பேரும் பெண்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ளவர்கள் என  தெரிவித்துள்ளனர்.

மாநிலங்கள் வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 16 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.  அடுத்தபடியாக ஒரிசா, மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 பேரும் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.  அதைப் போல் ஆந்திராவில் 8 பேரும், தெலங்கானாவில் 5 பேரும் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.

வேட்பு மனுவில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிட்ட பின்னும் மகாராஷ்டிராவில் 84 பேருக்குத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கியுள்ளன. அடுத்தபடியாக பீகாரில் 75 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 69 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.