மோடி அல்லது அமீத்ஷா கட்சியல்ல பாஜக: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

புதுடெல்லி:

பாஜக மோடி அல்லது அமீத்ஷா கட்சி அல்ல. அது கொள்கை ரீதியான கட்சி என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த காலத்தில் வாஜ்பாய், அத்வானியின் கட்சியாகவோ, தற்போது மோடி, அமீத்ஷா கட்சியாகவோ பாஜக இருந்ததில்லை.
பாஜக கொள்கை ரீதியான கட்சி. இது மோடியின் கட்சி என்று கூறுவது தவறு.

பாஜகவும் பிரதமர் மோடிக்கு கிடைத்த பொக்கிஷம். பிரதமர் மோடி பாஜகவுக்கு கிடைத்த பொக்கிஷம்.
பாஜக தனிப்பட்ட நபரை மையமாக வைத்து இயங்கியதில்லை. பாஜகவில் குடும்ப ஆட்சி கிடையாது.

பாஜக மோடியை மையமாக வைத்து இயங்குவதாகக் கூறுவது தவறு. எல்லா முடிவுகளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் எடுக்கப்படுகிறது.
கட்சி பலமாக இருந்து அதன் தலைவர் பலவீனமாக இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

பிரபலமான தலைவர் முன்னிலைப் படுத்தப்படுவது இயற்கையானதே.  எங்களது வளர்ச்சித் திட்டத்தை வைத்து பாஜகவை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்.

பாஜகவின் வளர்ச்சித் திட்டங்களை மறைக்கும் வகையில், சாதி விஷத்தையும், வகுப்புவாதத்தையும் விதைக்க எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன.
நான் நிச்சயமாக சொல்கிறேன். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

தேசியம் என்பது எங்கள் ஆன்மா. ஏழைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அளிப்பதே எங்கள் லட்சியம்.

ஒவ்வொரு தேர்தலிலும் தேசிய பாதுகாப்பு முக்கியமாக பேசப்படுகிறது. இந்த விசயத்தை நாங்கள் பெரிது படுத்தவில்லை.

பிரதமர் பாகிஸ்தானைப் பற்றியே பேசுவதாக கூறுகிறார்கள். பால்காட் தாக்குதல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்கும்போது, சொல்லித் தானே ஆக வேண்டும்.

தீவிரவாத தாக்குதலை உளவுத் துறையின் தோல்வியாக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட எந்த நாடும் பார்ப்பதில்லை.
மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றார்.