ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி பாஜக!: இல.கணேசன் எம்.பி. பேட்டி

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

ம.பி. மாநிலத்தில் எம்.பி.யாக உங்கள் செயல்பாடுகள் என்னனென்ன?

சர்தார் நகர், குண்டாதி என இரண்டு கிராமங்களை தத்தெடுத்திருக்கிறேன். ஒரு கிராமத்தை சுஷ்மா சுவராஜூம மற்றதை ம.பி. முதல்வரும் சிபாரிசு செய்தார்கள்.  அந்த கிராமங்களின்  அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் இருக்கிறோம்.

அக்கிராமங்களுக்குச் செல்லும்போது, மாவட்ட ஆட்சியரே உடன் வருகிறார். மாநில அரசு நிர்வாகம், எம்.பி.க்களின் நிதியைப் பெற்று கிராமங்களை மேம்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது.

சரஸ்வதி சிஷ்யு மந்திர் என்று 1500 கல்வி அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். பின்னணி உள்ளவர்கள் நடத்துகிறார்கள். மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகம். எண்ணற்ற மாணவர்களுக்கு கல்வி கிடைக்கிறது. அந்த கல்வி அமைப்புகளுக்கு எம்.பி. நதியில் இருந்து அளிக்கிறேன்.

எம்.பி. நிதியைப் பொறுத்தவரை  “உங்கள் விருப்பம் என்ன” என்றார் அம்மாநில முதல்வர்.

“தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு வசதிகளைச் செய்துதர வேண்டும் என்பது என் விருப்பம்” என்றேன்.

“அவர்களுக்கு செய்தது போக மீதமிருக்கும் தொகையை வேறு பணிகளுக்கு ஒதுக்குங்கள்” என்று மன நிறைவோடு சொன்னார்.

ம.பி. மாநில தமிழர்களுடன் உங்களுக்கு உள்ள நெருக்கம் எப்படி?

அம்மாநிலத்தில் தமிழர்கள் மிகக்குறைவு. தவிர அவர்களுக்கு தமிழ் பேசவும் தெரிவில்லை. நாம் பேசினால் புரிந்துகொள்வார்கள் அவ்வளவுதான். அதுவும் தூய தமிழில் நாம் பேசினால் அவர்களுக்குப் புரியாது. இந்தி கலந்து பேசினால் புரிந்துகொள்கிறார்கள்.

மகூ என்ற ஊரில் கூட்டம் போட்டிருந்தோம். அங்கு தமிழர்களும் சிறு அளவில் வசிக்கிறார்கள். கூட்டத்துக்கு அவர்களும் வந்திருந்தார்கள். தங்களுக்கு என்று சமுதாயக்கூடம் இல்லை என்றும்.. கட்டித்தரும்படியும் கேட்டார்கள்.

நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். “உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது எனது பாக்கியம்” என்றேன்.

காரணம், அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஊர் அது.

“அண்ணல் அம்பேத்கர் பிறந்த   ஊரில் இத்தனை தமிழர்கள் அதிலும் தலித் மக்கள் இருப்பது மிக மகிழ்ச்சி. சிறப்பாக செய்கிறேன். நிலம் மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன்.

அங்கு மண்டபம் கட்டி தமிழில் பலகை வைக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

இன்னொரு விசயம்..

சென்னை இந்தி பிரசார சபையில் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு எனறு தமிழ் இலக்கியஹ்கள் குறித்து இந்தியில் விவாதம். இதே போல் போபால் டில்லியில் நடத்த வேண்டும் என்று விருப்பம். விரைவில் அது நடந்தேறும் என நம்புகிறேன்.

தமிழக அரசு செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து?

அ.இ.அ.தி.மு.க.வுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலை குறித்து நான் வருத்தப்படுகிறேன். இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டியது.. ஈ.சி.! அதாவது எலக்க்ஷன் கமிஷன். 

இரட்டை இலை சின்னம் குறித்த பிரச்சினை தீர்ந்து..  அது கிடைத்துவிட்டால் எடப்பாடி தலைமையிலான அரசு, முழுமையாக நிர்வாகத்தில் கவனம் செலுத்தும். தடுமாற்றங்கள் சரியாகிவிடும்.

அடுத்து நீங்கள் கேட்காமலேயே ஒரு விசயத்தைச் சொல்கிறேன்.  பொதுவாகவே எதிராளிகள்..  எதிரி என்ற வார்த்தையா பயன்படுத்தவில்லை..  எதிராளி ஒருவர் இறந்துவிட்டார் என்பதாலேயோ அல்லது எதிராளி ஒருவர் உடல் ஊனமுற்று செயல்பட முடியாமல் இருக்கிறார் என்பதாலேயோ  அவருக்குச் சொந்தமான விசயத்தை ஆக்கிரமிக்க பா.ஜ.க. விரும்பாது. அது பாஜகவின் குணம் அல்ல.

ஆனாலும் அ.தி.மு.க. அரசை பா.ஜ.க.தான் இயக்குகிறது என்றுதான் பரவலாக விமர்சிக்கப்படுகிறது…

தவறு. அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

பிரதமராகும் முன்பே மோடி, “நான் மத்தியில் ஆட்சி அமைத்தால் பிரதமரும் எல்லா முதல்களும் ஒரு குழுவாக செயல்பட வேண்டும்..  அதே போல ஒவ்வொரு துறை மத்திய அமைச்சரும் அதே துறையின் மாநில அமைச்சர்களுடன் குழுவாக செயல்பட வேண்டும் என்றார். அந்த அளவுக்கு மாநிலங்களின் உரிமைகளை மதித்து, இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினார். அதே போல நடந்துகொண்டுவருகிறார்.

அதாவது மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் அரசியல் கிடையாது. அரசாங்கங்கள் மட்டும்தான்.

ஜி.எஸ்டியில் மத்திய அரசின் பங்கு குறைவு.. மாநிலத்துக்குத்தான் அதிகம். எதிர்க்கட்சி என சொல்லப்படுகிற ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்துக்கும் மத்திய அரசு உதவி செய்கிறது.

அதே போல்தான், தமிழக அரசுக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

ஆனால் இங்கு சிலர் வைக்கும் விமர்சனம் ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவில்லை என்கிறார்கள்… ஆனால் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். காலூன்றாத கட்சி எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும். முரண்பாடாக இருக்கிறதே.

மக்களிடம் காலூன்ற முடியவில்லை ஆனால் மத்திய அதிகாரத்தை வைத்து மாநிலத்தை ஆட்டிப்படைக்கிறது என்கிற அர்த்தத்தில் விமர்சிக்கிறார்கள்..

இல்லை. மாநில அரசை பாஜக ஆட்டிப்படைக்கவில்லை. ஆதிக்கம் செலுத்தவும் இல்லை. அதே நேரம், தமிழகத்தில் பாஜக நிதானமாக ஆனால் ஆழமாக காலூன்றி வருகிறது.

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின்  பிறந்தநாள் கூட்டத்தை தி.மு.க. நடத்தியது. பொதுவாக இது போன்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வை விமர்சித்துத்தான் பேசுவார்கள். ஆனால் அக்கூட்டத்தில் முழுக்க முழுக்க  பா.ஜ.க.வை விமர்சித்து பேசினார்கள். இப்போது தி.மு.க.வுக்கு அ.தி.மு.கவைப் பார்த்து பயமில்லை. பா.ஜ.கவைப் பார்த்துத்தான் திமுக அஞ்சுகிறது. இதிலிருந்தே நாங்கள் வளர்ந்திருக்கும் என்பதும் புரிகிறது.

தமிழக அரசு நிர்வாகம் குலைந்துபோய் இருக்கிறது.. போதிய எம்.எல்.ஏக்களுடன்தான் இந்த ஆட்சி நடக்கிறதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது மத்திய பாஜக அரசு.. என்று ஒரு விமர்சனமும் வைக்கப்படுகிறது..

காங்கிரஸ் ஆட்சி காலத்தில 356ஐப் பயன்படுத்தி ஆட்சிகளைக் கவிழ்ப்பது சகஜமான விஷயம். ஆனால் பா.ஜ.க. ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி.  விதிமுறைக்கு உட்பட்டுத்தான் மத்திய அரசு செயல்படும்.

அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.. தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. பிறகு அது குறித்த செய்திகளையே காணோம். ஆக.. வருமானவரித்துறையை தனது  அரசியல் நோக்குக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

அரசு துறைகள் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு நடப்பவை. சினிமா போல விறு விறு என்று காட்சிகள் ஓடாது. தொலைக்காட்சித் தொடர் போல நிதானமாகத்தான் நடக்கும். (சிரிக்கிறார்.)

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் வருமானவரித்துறை, சி.பி.ஐ. எல்லாம் அரசியல் நோக்கோடு செயல்பட வைக்கப்பட்டது. அதையே இப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.  அப்படி நினைக்க வேண்டியதில்லை. சட்டதிட்டங்களை மதித்தே பாஜக செயல்பட்டு வருகிறது.

(நிறைவு)