Random image

மனோகர் பாரிக்கர் தொடர் உடல் நலக்குறைவு: முதல்வர் மாற்றம் குறித்து பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனை

பனாஜி:

கோவா முதல்வர் பதவியில் யாரை அமர்த்தலாம் என்று பாஜக தலைமை ஆலோசனை செய்து வருகிறது. இதில் மூத்த அமைச்சர் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும்  கோவா முதல்வர்  மனோகர் பரிக்கர், பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பாஜ தலைமைக்கு தகவல் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

62 வயதாகும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்  கணைய அழற்சி  நோய்யால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த அவர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாகவும், மீண்டும் அமெரிக்க பயணமாக இருப்பதாகவும் மாறுபட்ட தகவல்கள் உலா வருகின்றன.

இதற்கிடையில், மாநிலத்தின் நலன் கருதி, தான் முதல்வர் பதவியில் தொடர விரும்பவில்லை என்றும், வேறு ஒருவரை முதல்வராக தேர்வு செய்யுங்கள் என்று  பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து கோவா மாநில முதல்வராக யாரை நியமனம் செய்யலாம் என்பது குறித்து  பாரதிய ஜனதா கட்சி யின் தேசியத் தலைவரான அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து,  முதல்வர் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.க மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி பாஜக மத்தியக்குழு கோவாவில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து,  பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து பாரிக்கருடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரிடம் முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைக்க பாரிக்கர் விரும்புவதாகவும் தெரிகிறது.

இதுபற்றி பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.