லக்னோ: பிரதமர் மோடியை கை தட்ட சொன்னதை விமர்சித்து பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு அக்கட்சி தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகேஷ் ரத்தோர். அவர் பிரதமர் மோடியை கிண்டல் செய்து பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த ஆடியோவில், பாஜக எம்எல்ஏ ரத்தோர், உள்ளூரைச் சேர்ந்த பாஜ தலைவர் ஜே.பி.சாகு என்பவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதில், ‘பிரதமர் மோடி மக்களை கைகளை தட்ட சொல்வதும், மணி அடிக்க சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்றாகும்.

கைகளை தட்டுவதன் மூலமாக கொரோனாவை விரட்டி விட முடியுமா? உங்களை போன்றவர்கள் முட்டாள்கள். கைகளை தட்டினால் கொரோனா அகன்று விடுமா என்று கூறியுள்ளார். பாஜக எம்எல்ஏவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு பாஜக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.