பணம் கொடுத்து பணி நியமனம்: பாஜ எம்.பி. மகள் உள்பட 19 அரசு அதிகாரிகள் அதிரடியாக கைது

கவுகாத்தி:

சாமில் பணம்கொடுத்து அரசு பணி நியமனம் உத்தரவு பெற்று பணியாற்றி வந்த 19 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. ஒருவரின் மகளும் அடங்குவார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணம்கொடுத்து பணிநியமனம் பெற்றது தொடர்பாக தேஸ்பூர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சர்மாவின் மகள் உட்பட 19 அரசு அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு இந்த பணி நியமனம் நடைபெற்றுள்ளது. அப்போது, அசாம் அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் பால் என்பவர் இருந்தார். அந்த காலக்கட்டத்தில், அசாம் குடிமைப்பணி, காவல்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 19பேர் தேர்வாணையத் தலைவர் ராகேஷ் பாலுக்குப் பணம் கொடுத்துப் பணி நியமனம் பெற்றது விசாரணையின்போது தெரிய வந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராகேஷ் பால், தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் சமேதுர் ரகுமான், வசந்த குமார் துலே, தேர்வுக் கட்டுப்பாட்டு உதவியாளர் பவித்ரா கைபர்த்தா ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், பணி நியமன ஆணை பெற்று அரசு பணியாற்றி வந்த குடிமைப்பணி அலுவலர்கள் 13 பேர், காவல்துறை அதிகாரிகள் 3 பேர் உள்பட மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தேஸ்பூர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சர்மாவின் மகள் பல்லவி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நீலமணியின் மகன் ராஜர்சி ஆகியோரும் அடங்குவர்.   இதனையடுத்து கைது செய்யப்பட்ட 19 பேரும் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.