சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்திய பாஜக முன்னாள் அமைச்சர் வீடு வாசல் முன்பு  சாணம் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 38வது நாளாக தொடர்கிறது. இதுவரை நடத்தப்பட்ட 6 கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் வரும் 4ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருப்பதுடன்,  வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், திக்சன் சூட், விவசாயிகள் டெல்லிக்கு சுற்றுலா சென்றுள்ளதாக விமர்சித்தார். இது விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து,  திக்சன் சூட் பேச்சுக்கு  கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஹோசியான்பூரில் உள்ள அவர் வீட்டு வாசலில் மாட்டு சாணத்தை விவசாயிகள் கொட்டியுள்ளனர். இது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.