காசி : பெண்ணை பலாத்காரம் செய்ததாக பாஜக பிரமுகர் கைது

காசி

வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் காசியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் பதோகி மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் கன்னையா லால் மிஸ்ரா.   இவரிடம் தனக்கு வேலை வாங்கித் தருமாறு பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இவர் இது குறித்து ஒரு அரசு பெண் அதிகாரியுடன் பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.   மிஸ்ரா ஒரு நாள் அந்தப் பெண்ணை அழைத்து அந்தப் பெண் அதிகாரி காசி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளதாகக் கூறு அந்தப் பெண்ணை அங்கு வரச் சொல்லி இருக்கிறார்.

கன்னையா லால் மிஸ்ரா

மிஸ்ரா சுமார் 50 வயதுக்கு மேலானவர் என்பதால் அவரை நம்பி அந்தப் பெண் விடுதி அறைக்கு வந்துள்ளார்.   அங்கு தனியாக தங்கி இருந்த மிஸ்ரா இவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் உடனடியாக கூச்சல் இட்டுளார். அத்துடன் அவசர காவல்துறை பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.   அதை ஒட்டி அங்கு சென்ற காவல்துறையினர் மிஸ்ராவை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

மிஸ்ரா மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  மேலும் அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.   கடந்த சில நாட்களுக்கு முன்பு உனாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது கூட்டு பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.