ராம்கர், ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதால் ஒரு இஸ்லாமியரை ஒரு கும்பல் தாக்கிக் கொன்றது.   அது தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

கடந்த வியாழன் இரவு, அலிமுதின் என்னும் 55 வயதான இஸ்லாமியர் தனது காரில் மாட்டுக்கறி எடுத்துக் சென்றதால் ஒரு கும்பலால் வழிமறிக்கப்பட்டார்.   சுமார் 100 பேர் கொண்ட அந்தக் கும்பல் அவரைத் தாக்கிக் கொன்றது.

இந்த சம்பவம் ஒரு வீடியோ ரிக்கார்டிங்கில் பதிவாகி வைரலாகப் பரவி  உள்ளது.    போலிசின் விசாரணையில் இந்த வீடியோவே முக்கிய சாட்சியம் ஆனது.   முக்கிய குற்றவாளியான சோட்டு ராம் என்பவர் சரண் அடைந்தார்.  விடியோ பதிவு, மற்றும் சோட்டுவின் வாக்குமூலத்தின் படி நித்யானந்த் மாதோ என்னும் உள்ளூர் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது தான் சம்பவம் நடந்த பின் போலிசாருடன் தான் அந்த இடத்துக்கு வந்ததாக மாதோ சொல்லி இருந்தார்.   ஆனால் வீடியோவை பரிசோதித்த போது அவர் கூறியது தவறென்று கண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.   அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு சரியான சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ஷிவ் புஜன் பதக்,  தாமோ அல்லது கட்சி மேலிடமோ வன்முறையை வரவேற்கவில்லை எனவும்,  கைது நடவடிக்கையில் தலையிட மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.   மேலும் அவர், யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார்.

தற்போது ராம்கர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது,   நிலைமை சீராகும் வரை இந்த உத்தரவு தொடரும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் இருமுறை மாட்டுக்கறிக்காக,  இஸ்லாமியர் தாக்கிக் கொல்லப்படுவது நடந்துள்ளது.