கொல்கத்தா

மேற்கு வங்க மக்களவை இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் காலிகஞ்ச்,காரக்பூர் சாதர், மற்றும் கரிம்பூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்து திருணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.    கடந்த மக்களவை தேர்தலில் காலியாகஞ்ச் மற்றும் காரக்பூர் சாதர் தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.  அத்துடன் கரீம்ப்புர் தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றிருந்தது.

இது குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் ராகுல் சின்ஹா, “ஆளும் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி அடைய மாநில நிர்வாகம் வெளிப்படையாக உதவி உள்ளது.  இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.  இந்த தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து வந்த போதிலும் இடைத்தேர்தலை நடத்தியது மாநில நிர்வாகம் ஆகும்.  திருணாமுல் கட்சி தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யும்.

சென்ற முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம்.  அத்துடன் கரிம்பூர் தொகுதியில் முன்பை விட குறைந்த வாக்குகள் பெற்றுள்ளோம்.  காரக்பூர் சதார் தொகுதியில் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த திருணாமுல் தற்போது முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.    இதனால் எங்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.  குறிப்பாக வாக்கு எண்ணும் போது ஆளும் கட்சி மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்ய வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் வெற்றி பெறும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்றாகும்.  பாஜக தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிப்பது அவர்கள் வழக்கமாகும்.  பல முறை பாஜக தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெறாது என உறுதி அளித்துள்ளனர்.  தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளதாக பாஜக தலைவரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.