போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த, ஜோதிராதித்யா சிந்தியா,  பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரிய பிரசாரம் செய்தபோது, தாமரைக்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக, பழைய ஞாபகத்தில் கை சின்னத்திற்கு வாக்கு கோரினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச அரசியலில், முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கும்,  ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலில்,  கடந்த  மார்ச் மாதம் தனது ஆதரவாளர்களான  22 எம்.எல்.ஏ-க்கள்  உடன் காங்கிரஸில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து,  கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலய 22 எம்எல்ஏக்களும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காலியான அவர்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.  இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு,  ஆதரவாக  ஜோதிராதித்ய சிந்தியா பிரசாரம் செய்து வருகிறார்.  பாஜக வேட்பாளர் இமார்டி தேவியை ஆதரித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, உங்கள் கைமுட்டிகளை மூடிக்கொண்டு நவம்பர் 3ம் தேதி, ‘கை’ சின்னத்தில் பட்டனை அழுத்தி, காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று பழைய ஞாபகத்தில் ஆக்ரோஷமாக கூறினார்.

உடனடியாக தவறுதலாக சொல்லிவிட்டோம் என்று உணர்ந்துகொண்ட சிந்தியா திருத்திக்கொண்டு தாமரை சின்னத்தில் பட்டனை அழுத்துங்கள் என்று கூறினார். ஜோதிராதித்யாவின் தேர்தல் பிரசாரம் சமுக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பழைய ஞாபகத்தில்,ஜோதிராதித்ய சிந்தியா  கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை ம.பி மாநில காங்கிரஸ் கட்சியும் விமர்சித்து பதிவிட்டுள்ளது. அதில்,  “சிந்தியா மத்திய பிரதேச மக்கள் நவம்பர் 3ம் தேதி கை சின்னத்திற்கு ஓட்டு போடுவார்கள் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.