மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு!! மேகாலயாவில் பாஜ கூடாரம் காலியாகிறது

காரோஹில்ஸ்:

மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேகாலயா மாநிலம் மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்ட பாஜ தலைவர் பெர்னாட் மராக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் மூன்றாண்டு சாதனைகளை கொண்டாடும் வகையில் மாட்டு இறைச்சி விருந்துக்கு இவர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாஜ தலைவர் மதிக்க தவறிவிட்டனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘வடகிழக்கு மலை வாழ் மக்களுக்கு என்று தனி விழா கொண்டாட்ட நடைமுறைகள் உள்ளது. காரோ மலையில் ஒரு திருவிழா நிகழ்வின் போது மாடுகள் பலியிடப்படுவது வழக்கம். அதனால் மோடி மூன்றாண்டு சாதனையை கொண்டு மாட்டு இறைச்சி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ ஒரு அரசியல் கட்சி எங்களது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்க முடியாது. நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று அந்த கட்சி உத்தரவிடக் கூடாது’’ என்றார்.

வடக்கு மாவட்ட தலைவர் பச்சு சம்புகாங் மராக் கூறுகையில்,‘‘எங்களது பாரம்பரிய உணவு மாட்டு இறைச்சி. அதனால் மாட்டு இறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். எங்களால் மாட்டு இறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியாது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,‘‘இந்த பிரச்னைக்கு தலைவர்கள் தீர்வு காணவில்லை என்றால் நாங்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். தீர்வு கண்டால் கட்சியில் இருப்போம். ஆனால், மாட்டு இறைச்சிக்கு தடை விதித்தால் காரோ ஹில்ஸ் பகுதி மக்களின் ஆதரவு கட்சிக்கு கிடைக்காது’’ என்றார்.

பாஜ துணைத் தலைவர் ஜான் ஆண்டோனியஸ் கூறுகையில், ‘‘ கால்நடை வர்த்தகம் மற்றும் மாட்டு இறைச்சி தொடர்பான மோடி அரசின் புதிய உத்தரவால் மக்களின் சமூக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கட்சியின் பல தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய உத்தரவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம். எங்களது உணவு பழக்க வழக்கத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம்’’ என்றார்.

பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் நளின் கோஹ்லி கூறுகையில்,‘‘ மலை வாழ் மக்களின் பாரம்பரியம் அல்லது உணவு பழக்கத்திற்கு எதிராக பாஜ எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை பயன்படுத்துகின்றனர்’’ என்றார்.