போபால்

ர்நாடகாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக முயலுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வந்தது.  இந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தது.  காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மைக்கு 116 உறுப்பினர்கள் தேவைப்பட்ட நிலையில் 114 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.  எனவே காங்கிரஸ் கட்சி  2 சமாஜ்வாதி உறுப்பினர்கள், ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினர் மற்றும் ஒரு சுயேச்சை ஆகியோரின் ஆதரவுடன் செய்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் பாஜக ஆட்சி அமைக்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.    இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சியான பாஜக தலைவர் கோபால் பார்கவா செய்தியாளர்களைச் சந்தித்து கர்நாடக  அரசியல் குறித்து பேசி உள்ளார்.

அப்போது கோபால் பார்கவா, “மத்தியப் பிரதேசத்தில் கர்நாடகாவை விட மோசமான அரசியல் சூழல் உள்ளது.   இந்த மாநில கூட்டணி அரசு கொள்கை அடிப்படையிலோ அல்லது சித்தாந்த ரீதியாகவோ ஏற்பட்டதில்லை.  இந்த அரசு பேராசையின் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது.  கூட்டணி கட்சியினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் அவர்கள் ஆட்சியைக் கலைத்து விடுவார்கள்.   இந்த அரசு 7 மாதம் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்.

கர்நாடக ஆட்சி கலைப்புக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.   அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்கள் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இணைகின்றனர்.    இந்த தகவல்கள்  ஊடகங்களில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஒரு வேளை மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள்  எங்களிடம் வ்னது இணைந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?   எங்கள் கட்சியின் தலைமை ஒப்புதல் அளித்தால் கமல்நாத் அரசு ம பி யில் 24 மணி நேரம் கூட நிலைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மறுப்பு தெரிவித்த போதிலும் கர்நாடக அரசு கவிழ்ப்புக்கு அக்கட்சியே காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.  இந்நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு கூறியது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.