ஓரினச் சேர்க்கை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்….சுப்ரமணியன் சுவாமி

டில்லி:

ஓரினச் சேர்க்கை நாட்டின் பாதுகாப்பு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ஐபிசி 377வது பிரிவின் கீழ் ஓரினச் சேர்க்கை என்பது குற்றமாகும். இதற்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஓரினச் சேர்க்கையால் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘ஒரினச் சேர்க்கை என்பது சாதாரண விஷயம் கிடையாது. இது அமெரிக்கர்களின் பழக்கம். இதன் பின்னால் அதிகளவில் பணம் விளையாடுகிறது. அமெரிக்கர்கள் ‘கே பார்ஸ்’ எனப்படும் ஒரினச் சேர்க்கை பார்களை திறக்க வலியுறுத்துகின்றனர். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இது கவசமாக அமையும். எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இது தேச பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும்.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதற்கு அரசின் ஆதரவு கிடையாது. இதை இயற்கையாக கருத முடியாது. அவர்களும் சாதாரண பொருளாதார வாழ்க்கை வாழ வேண்டும். அவர்களுக்கும் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை கொண்டாட அனுமதி வழங்க முடியாது. ஓரினச் சேர்க்கையை சாதாரணமாக நடத்த அது இயற்கையான விஷயம் கிடையாது. இதை குணப்படுத்தும் ஆராய்ச்சிக்கு நாம் செலவிட வேண்டும்’’ என்றார்.

‘‘ஓரினச் சேர்க்கையை சாதாரணம் என்றும், சுதந்திரம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தால், மத்திய அரசு 7 அல்லது 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைத்து இதை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஓரினச் சேர்க்கை இந்துத்வாவுக்கு எதிரானது. வேதத்துக்கு எதிரானது. இதை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்’’ என்றார்.