பெட்ரோல் விலை ரூ.40க்கு மேல் இருக்கக்கூடாது: பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி மத்தியஅரசுக்கு கடும் கண்டனம்

டில்லி:
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதற்கு பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பெட்ரோல் விலை 40 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்றும், நிர்வாக சுரண்டல் காரணமாகவே விலை உயர்ந்து வருகிறது என்று மோடி அரசுமீது கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளார்.

தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக மத்திய பாஜ அரசு மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேரத்தின்போது சற்று குறைந்திருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் விண்ணை நோக்கி பறக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு வரலாறு காணாத உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.82.24ஆக வும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 42 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.77ஆகவும் உள்ளன.

இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜ தலைவர்களில் ஒருவரான சுப்பிர மணியசாமியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  எல்லாவற்றிலும் சுரண்டல்கள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.