‘என் மனைவிக்கு வாக்களிக்காவிட்டால்….. ‘ இஸ்லாமியர்களுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி

லக்னோ,

உ.பி. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக நிர்வாகியின் மனைவிக்கு வாக்கு சேரிக்க சென்ற அவர் கணவர், என் மனைவிக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்காளிக்காவிட்டால் கடும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அந்த பகுதி இஸ்லாமியர்களிடம் மிரட்டல் விடுத்தார்.

உ.பி.யில் யோகி தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. அங்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், உ.பி. பாராபங்கி மாவட்டத்தில் நவபாகனி என்ற இடத்தில் போட்டியிடும் தனது மனைவி சாக்ஷிக்கு வாக்கு கேட்டு  கடந்த 13ந்தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய பாஜக. நிர்வாகியும், சாக்ஷியும் கணவருமான ரஞ்சித்குமார் ஸ்ரீவத்சவா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.  இஸ்லாமியர்கள் தங்களுக்கு வாக்காளிக்காவிட்டால் கடும் விளைவுகளை சநதிக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தார்..

மேலும், ‘தற்போது நடைபெறுவது சமாஜ்வாதி ஆட்சி அல்ல. எங்கள் ஆட்சி.  எந்தத் தலைவர்களும் உங்களுக்கு உதவி செய்யமுடியாது.

இந்த பகுதி மக்களுக்கு தேவையான  சாலை வசதி, தண்ணீர் வழங்குதல் உள்ளிட்டவை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ்தான் உள்ளது. நீங்கள் (இஸ்லாமியர்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லையென்றால், இருதரப்புக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடும். அதன்பின்னர், நீங்கள் இதற்குமுன்னர் சந்திக்காத அளவு துன்பங்களைச் சந்திக்க நேரும். எங்களிடமிருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.

அதனால்தான், நான் இஸ்லாமியர்களை எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறேன். நான் ஒன்றும் உங்களிடம் பிச்சை எடுக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், நிம்மதியாக வாழலாம். இல்லை யென்றால், நீங்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டிவரும்’ என்று பேசியுள்ளார்.

பா.ஜ.க நிர்வாகி ரஞ்சித் குமார் மிரட்டி பேசும்போது, அவருடன் அதே  மேடையில் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் தாரா சிங் சௌஹான் மற்றும் ராம்பதி சாஸ்திரி ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக நிர்வாகியின் இந்த மிரட்டல் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.  அமைச்சர்கள் முன்னிலையில் இஸ்லாமியர்களை மிரட்டி பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.