பாஜக தலைவர்கள் தொடர் மரணம் : பிரக்யாவின் பரபரப்பு கண்டுபிடிப்பு

போபால்

பாஜக தலைவர்கள் தொடர் மரணத்துக்கு எதிர்க்கட்சிகள் ஏவிவிட்ட தீய சக்திகளே காரணம் என போபால் மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா கூறி உள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ள சாத்வி பிரக்யா தாகூர் பாஜக சார்பில் போட்டி இட்டார். அவர்  அப்போது இருந்தே பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருகிறார். தேர்தல் நேரத்தில் அவர் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சைவை தேசபக்தர் எனப் புகழாரம் சூட்டியதால் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்டு சர்ச்சையை முடித்தார்.

தற்போது பாஜக மூத்த தலைவர்களான வாஜ்பாய், மனோகர் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்டோர் உடல் நலக் குறைவால் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இது குறித்து போபாலில் செய்தியாளர்களிடம் பிரக்யா,”நடந்து முடிந்த மக்களவை தேர்தல் சமயத்தில் மகாராஜ்ஜி என்னிடம் வந்து, பாஜகவுக்கு இது மிகவும் மோசமான நேரம்.  எதிர்க் கட்சிகள் உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராகத் தீய சக்திகளைப் பயன்படுத்துகின்றன. எனவே இந்த சூழலில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என என்னிடம் எச்சரித்தார்..

அதன் பிறகு நான் அதை அடியோடு மறந்து விட்டேன். ஆனால் இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் உண்மையைக் கூறி உள்ளார் என்றே எனக்குத்  தோன்றுகிறது. ஒருவர் பின் ஒருவராகக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மரணமடைந்து வருகின்றனர். நாம் அன்று மகாராஜ் ஜி சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இதை எல்லாம் நீங்கள் நம்புவீர்களா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது உண்மை என்றே தோன்றுகிறது” எனத் தெரிவித்து அடுத்த. சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளார்.